ஒரு அம்மா அதிகாலையில் எழுந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள். அவள் தனது குடும்பத்துக்கு காலை உணவைத் தயாரித்து, மதிய உணவைக் கட்டி, தன் குழந்தைகளை எழுப்பி, பள்ளிக்கூடத்துக்குத் தயார்படுத்துவதன் மூலம் தனது நாளைத் தொடங்குகிறாள். துணி துவைத்துவிட்டு மளிகைக் கடைக்குச் செல்கிறாள். சில சமயங்களில், இந்த வேலைகளை எல்லாம் செய்துகொண்டே அவள் வேலைக்குப் போகிறாள். இந்த வேலைகள் அவரது குடும்பத்தின் நல்வாழ்வுக்கு இன்றியமையாதவை. ஆனால், உத்தியோகபூர்வ தொழிலாளர் புள்ளிவிவரங்களில் இன்னும் பிரதிபலிக்கவில்லை.
இந்த வேலையின் பெரும்பகுதி கவனிக்கப்படாமல் போகிறது. ஏனெனில், இது ஊதியம் இல்லாமல் முறையான பணியிடத்தில் இல்லாமல் வீட்டிலோ அல்லது சமூகத்திலோ செய்யப்படுகிறது. சமீபத்திய பொருளாதார மாற்றச் சட்டம் 2030ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 40% வேலை செய்யும் வயதுடைய பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பெண்கள் அதிகாரமளிக்கும் சட்டம் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்புகளை கவனத்திற்கொண்டுவந்துள்ளது. இருப்பினும், இந்தச் சட்டங்கள் பெரும்பாலும் சமூக இனப்பெருக்கம் என்று அழைக்கப்படுவதைக் கவனிக்கவில்லை.
குழந்தைப் பராமரிப்பு மற்றும் வீட்டுப் பராமரிப்பு போன்ற ஊதியம் பெறாத பராமரிப்பு வேலைகள் பொருளாதாரத்துக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதைப் பற்றி சமூக இனப்பெருக்கம் ஆராய்கிறது. தற்போதைய மற்றும் வருங்கால ஊழியர்கள் ஆரோக்கியமாகவும் வேலை செய்யத் தயாராகவும் இருப்பதை இந்தக் கருத்து உறுதிசெய்கிறது. இந்த முயற்சிகளின் மதிப்பை அங்கீகரிப்பதும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை நியாயமாகப் பகிர்ந்துகொள்வதும் முக்கியம்.
ஊதியம் பெறாத வேலையை அங்கீகரிப்பதும் மதிப்பிடுவதும் ஊதிய வேலையில் பாலின சமத்துவ மின்மையைக் குறைப்பதற்கு முக்கியமானதாகும். இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பிலுள்ள சிக்கல்கள்
கடந்த தசாப்தத்திலும் அதற்கு முன்னரும் கூட, இலங்கையில் பெண் தொழிலாளர் பங்கேற்பு வீதம் (LFPR) ஆண்களை விட தொடர்ந்து பின்தங்கியே உள்ளது.
அதாவது, வேலை செய்யும் அல்லது வேலை தேடும் ஆண்களின் எண்ணிக்கையை விட வேலை செய்யும் அல்லது வேலை தேடும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இருப்பினும், குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு பிரச்சினை முதல் பார்வையில் தோன்றுவதை விட மிகவும் சிக்கலானது.
சமூக இனப்பெருக்கம் பற்றிய யோசனை, ஊதிய வேலை மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்பு வேலை ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பிரச்சினை தொழிலாளர்களில் பெண்களின் பற்றாக்குறை மட்டுமல்ல, வேலையை எப்படி வரையறுத்து மதிப்பிடுகிறோம் என்பது பற்றியது. எல்லாப் பெண்களும் உழைக்கும் பெண்கள்தான். ஆனால், அவர்களின் பல மணிநேர ஊதியம் பெறாத உழைப்பை ‘பொருளாதார ரீதியாகச் செயலற்றவர்கள்’ என்று நாம் அடிக்கடி புறக்கணிக்கிறோம். பெண்களின் ஊதியம் பெறாத உழைப்பு, பெரும்பாலும் தொழிலாளர் புள்ளிவிவரங்களில் அங்கீகரிக்கப்படாமல், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்புகளின் உண்மையான அளவை மறைக்கிறது.
ஊதியம் பெறாதது மட்டுமல்ல பிரச்சினை. பிரச்சினை என்னவென்றால், இந்தச் சமூகப் பாத்திரங்கள் அத்தகைய வேலையை ‘பெண்களின் வேலை’ என்று முத்திரை குத்துகின்றன. எனவே, குடும்பம், பணியிடம் அல்லது அரசிடமிருந்து எந்த ஆதரவையும் பெறாததால், அது அவர்களுக்குச் சுமையாக அமைகிறது. இந்த வேலையைச் செய்பவர்கள் பலாபலன்களை எதிர்பார்க்காமல், மற்றவர்கள் மீது அக்கறை காட்டுவதால் செய்கிறார்கள்.
இலங்கையின் 2017ஆம் ஆண்டின் நேரப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பின்படி, 10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளில் 87.3% பேர் வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில் 59.7% ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மட்டுமே அத்தகைய வேலையைச் செய்கிறார்கள். இந்தப் பணிகளில் செலவிடப்படும் நேரமும் சக்தியும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான சுமையை அதிகரிக்கச் செய்கிறது.
எடுத்துக்காட்டாக, ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் வீட்டு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு ஊதியம் இல்லாத பராமரிப்பு வேலைகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக நேரத்தைச் செலவிடுவதாக இந்தக் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. குடும்பத்திலும் சமூகத்திலும் ஆண்களும் பெண்களும் செய்யும் பணிகளின் வகைகள் வேறுபட்டவை என்பதையும் இது காட்டுகிறது. வீட்டு வேலைகள் மற்றும் அதிக கவனிப்பு தேவைப்படும் வேலைகள் பெரும்பாலும் பெண்களால் செய்யப்படுகின்றன.
முன்னர் குறிப்பிட்டபடி, ஆதரவு அமைப்புகளின் பற்றாக்குறை இந்தச் சிக்கலை அதிகரிக்கிறது. இலங்கையிலுள்ள நகர்ப்புறக் குடும்பங்கள் பற்றிய உலக வங்கியின் ஆய்வின்படி, பெண்களின் ஊதியமல்லாத வேலை கணவரின் வருமானத்தைச் சார்ந்ததல்ல. மாறாக, குடும்பத்திலுள்ள ஏனைய பெரியவர்களின் வீட்டு வேலை மற்றும் குழந்தைப் பராமரிப்பு ஆகியவற்றின் பங்கைச் சார்ந்துள்ளது.
அதாவது, தாய்மார்கள் தங்கள் குழந்தைப் பராமரிப்பு மற்றும் வீட்டுப் பொறுப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தால், ஊதியம் பெறும் வேலையில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பராமரிப்புப் பணியை ஆதரிப்பதற்கான கொள்கைகளை அறிமுகப்படுத்துவது பெண்களுக்கு மட்டுமல்ல, இந்தப் பணிகளைச் செய்யும் ஆண்களுக்கும் பயனளிக்கிறது.
பணம் செலுத்தப்படாத பராமரிப்பு, பெண்களின் திறன் மற்றும் பொருளாதாரம், ஊதியம் பெறாத பராமரிப்புப் பணியின் பொருளாதாரத் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இந்த வகையான வேலைகளால் பெண்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்போது, ஊதியம் பெறும் வேலைகளில் கவனம் செலுத்துவதற்கான நேரம் குறைவாக இருக்கும். இதனால் அவர்கள் வேலை செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இது வேலை சந்தையில் பாலின ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கிறது.
ஏற்கனவே முறையான வேலையிலிருக்கும் பெண்கள் கூட குடும்பப் பராமரிப்புப் பொறுப்புகளைச் சந்திப்பதற்காக முறைசாரா வேலை அல்லது வேலையின்மையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) அல்லது ஊழியர்களின் அறக்கட்டளை நிதி (ETF) போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாதவர்களை இது குறிப்பாக பாதிக்கிறது.
ஏற்கனவே பணிபுரியும் பெண்களுக்கு, ஊதியமில்லாத கவனிப்பு வேலை, பணிச்சுமையை இரட்டிப்பாக்குகிறது. மேலும் அவர்கள் பணிப் பொறுப்புகளை மேற்கொள்வதைக் கடினமாக்குகிறது. இதன் விளைவாக, அவர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள். தனிப்பட்ட கவனிப்பு அல்லது பொழுதுபோக்கு ஆகியவற்றில் குறைந்த நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
இது கால வறுமை எனப்படும். முக்கியமான செயல்களுக்குப் போதுமான நேரம் இல்லாததால் நிலையான மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த நேரப் பற்றாக்குறை வெறும் சிரமத்துக்கு அப்பாற்பட்டது. இது உடல் ரீதியில் உடல் நலக்குறைவு மற்றும் மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது பெண்களின் திறன்களை வளர்ப்பதற்கான திறனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அல்லது சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடும் திறனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை எதிர்மறையாகப் பாதிக்கலாம்.
அண்மைக்காலமாக இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியானது பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படக்கூடியவர்களாக மாற முடியும் என்பதையும் காட்டுகிறது. குடும்பத்துக்குள்ளேயே நிதி அழுத்தம் பரவுவதால், குறைந்த வளங்களுடன் குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதால் பெண்கள் கூடுதல் சுமைகளை எதிர்கொள்கின்றனர். தொற்றுநோய் உள்நாட்டில் பரவிய காலத்தில் பள்ளிக்கூடங்கள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டதால், பெண்கள் வீட்டில் அதிக கவனிப்பு எடுக்க வேண்டியிருந்தது. பலர் தங்கள் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டியிருந்தது அல்லது தங்கள் குழந்தைகள், வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் வயதான குடும்ப உறுப்பினர்களைக் கவனிப்பதற்காக தங்கள் வேலையை முழுவதுமாக விட்டுவிட வேண்டியிருந்தது.
இடைவெளியைக் குறைத்தல்: ஊதியமில்லாத வேலைக்கான கொள்கைத் தீர்வுகள்
ஒரு பொருளாதாரம் ஊதியம் பெறாத பராமரிப்பு வேலைகளை நம்பியிருக்கும் போது, முழு அமைப்பும் இந்த மறைக்கப்பட்ட வேலையைச் சார்ந்திருக்கும் சூழ்நிலை உருவாகிறது. தொழிலாளர் சந்தையில் மட்டுமல்ல, சமூக மட்டத்திலும் பாலின சமத்துவத்தை அடைய இந்தப் பிரச்சினை விரிவான அரசியல் மற்றும் சமூக மாற்றங்களின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். நிலையான வளர்ச்சிக்கு இது அவசியம்.
கொள்கை மேம்பாடு மற்றும் வரவுசெலவுத் திட்டத்தில் பராமரிப்புப் பணிகளுக்கு முன்னுரிமை இருக்க வேண்டும். குடும்பங்கள் மீது நிதி செலுத்தப்படாத கவனிப்பின் சுமையை கணிசமாகக் குறைக்கும் பொதுச் சேவைகள் அல்லது திட்டங்களை ஆதரிப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் நிதியை வழங்க அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதாரணமாக, கிராமப்புற நேபாளத்தில், பொது மழலையர் பள்ளிக்கூடங்களை உருவாக்குவது இளம் குழந்தைகளுடன் தாய்மார்களின் சுமையைக் குறைக்கிறது. இதனால் கற்களை நசுக்குவது, பண்ணையில் வேலை செய்வது போன்ற கூலி வேலை களைச் செய்ய முடிந்தது.
FLFPயை அதிகரிக்க, பெண்களின் நலனை மேம்படுத்த பல கொள்கைகளை செயற்படுத்த முடியும் என்றாலும், கூலி வேலைகளில் பங்கேற்பது அவர்களின் நல்வாழ்வைக் குறைப்பதற்குப் பதிலாக அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். வீட்டு வேலைகள் அல்லது பராமரிப்பு வேலைகளில் செலவழிக்கும் நேரத்தைக் குறைக்காமல், கூலி வேலைகளை மேற்கொள்வது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே அனைத்து வீட்டு வேலைகளையும் கையாண்டவர்களிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களின் பங்கேற்பை எதிர்பார்க்க முடியாது.
உட்கட்டமைப்பில் இலக்கு முதலீடு, அடிப்படைச் சேவைகளை சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் மின்சாரம், தண்ணீர் மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல் ஆகியவை ஊதியம் இல்லாத பராமரிப்பு வேலைகளில் பெண்கள் செலவிடும் நேரத்தைக் குறைக்கும். எடுத்துக்காட்டாக, உகண்டா மற்றும் ஜிம்பாப்வேயிலுள்ள பெண்களுக்கு அதிக ஓய்வு நேரத்துடன் தண்ணீருக்கான மேம்பட்ட அணுகல் தொடர்புடையது என்று ஓர் ஆய்வு காட்டுகிறது.
பெண்கள் முறையான தொழிலாளர் படையை விட்டு வெளியேற அல்லது நுழையாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று குழந்தைப் பராமரிப்பு பொறுப்புகளாகும். எனவே, மானியங்களை வழங்குதல் அல்லது தரமான குழந்தைப் பராமரிப்புக்கான பொது வழங்கல் ஆகியவை தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பைக் கணிசமாக மேம்படுத்தும்.
இருப்பினும், எந்தவொரு கொள்கையும் அனைவருக்கும் சமமாகப் பயனளிக்காது. சில பெண்கள் இந்தச் சேவைகளை அணுக முடியாமல் போகலாம். அவர்களின் பராமரிப்புப் பொறுப்புகளை தனியாகக் கையாள வேண்டும். எனவே, நெகிழ்வான பணி நிலைமைகளை வழங்குவது மற்றும் பெண்களின் பல்வேறு நிதி மற்றும் சமூக சூழ்நிலைகளை அங்கீகரிப்பது முக்கியமாகும்.
இந்தப் பரிசீலனைகளை அரசாங்கமும் தனியார் துறையும் உருவாக்க வேண்டும். ஒரு சாதகமான உதாரணம், MAS ஹோல்டிங்ஸ் ஆகும். இது இலங்கையிலுள்ள பல மூலோபாய வணிக அலகுகளில் குழந்தைப் பராமரிப்புச் சேவைகளை வழங்குகிறது. பொருளாதாரக் கொள்கைகள் இன்றியமையாததாக இருந்தாலும், ஆழமாகப் பதிந்துள்ள கலாசார விழுமியங்களையும் பாலினப் பாத்திரங்களையும் மாற்றுவதற்கு அவை போதாது. சமூக நெறிமுறைகளை மாற்றுவதற்கும் வீட்டிலும் பணியிடத்திலும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் முக்கியமானவை. இதில் பொது விழிப்புணர்வுப் பிரசாரங்கள், கல்வி மற்றும் பகிரப்பட்ட வீட்டுப் பொறுப்புகளை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும். இதற்கான சமீபத்திய முயற்சி இந்தியாவின் கேரள அரசால் மேற்கொள்ளப்பட்டது. இது ஆண்களும் பெண்களும் கவனிப்புப் பணிகளைச் செய்யும் பாலின நடுநிலை பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்தியது.
பெரும்பாலும் பெண்களால் செய்யப்படும் ஊதிய மில்லாத பராமரிப்புப் பணி, நமது பொருளாதாரத்தின் மறைக்கப்பட்ட முதுகெலும்பாகும். பொருளாதார புள்ளிவிபரங்களில் அதன் அங்கீகாரமின்மை அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை மறைத்து பாலின ஏற்றத்தாழ்வுகளை தொடர்கிறது. தொழிலாளர் தொகுப்பிலுள்ள பெண்களின் திறனை முழுமையாக உணர்ந்து, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, ஊதியம் இல்லாத பராமரிப்புப் பணியை அங்கீகரிப்பதும் மதிப்பதும் நியாயமாக விநியோகிப்பதும் முக்கியமாகும்.
பராமரிப்பை ஆதரிக்கும் கொள்கைகளை உருவாக்குதல், பாலின விதிமுறைகளை சவால் செய்தல் மற்றும் பொது உட்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம், பெண்கள் தங்கள் சொந்த அல்லது தங்கள் குடும்பத்தின் நல்வாழ்வை தியாகம் செய்யாமல் வேலை செய்ய சம வாய்ப்புள்ள சமூகத்தை உருவாக்க முடியும். பராமரிப்பு வேலையை நியாயமான முறையில் பகிர்ந்துகொள்வதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது சமூக நீதி மட்டுமல்ல, பொருளாதார முன்னேற்றத்துக்கும் அவசியமானது.






Leave a Reply