சர்வதேச கடன் மறுசீரமைப்பு என்பது என்ன?

சர்வதேச கடன் மறுசீரமைப்பு என்பது நாடுகள் தங்கள் கடன்களைத் திருத்தி மாற்றுவதன் மூலம் அதை எளிதாகத் திருப்பிச் செலுத்தக் கொண்டுவரும் செயல்முறையாகும். கடன் மறுசீரமைப்பில் பின்வருவன அடங்கும்.

முதல்தொகை வெட்டு

பணத்தொகையின் (அல்லது ‘முகப்பு மதிப்பு’) ஒரு பகுதியை குறைத்தல் (எடுத்துக்காட்டாக, அரசு $1,000 மில்லியன் மதிப்பிலான பத்திரத்தை வெளியிட்டால் அதை 20% குறைத்து $800 மில்லியனாகக் குறைக்க முடியும். இது 20% முதல்தொகை வெட்டாகும்).

வட்டி வீதக் குறைவு

வட்டி வீதத்தைக் குறைத்தல் (எடுத்துக்காட்டாக, அரசு 10% வட்டி வீதத்தில் பத்திரத்தை வெளியிட்டால் அதை குறைத்து வட்டிச் சுமையைக் குறைக்க முடியும்).

முதிர்வு நீடிப்பு / மறுசீரமைப்பு

பத்திரத் தின் மதிப்பு நாளை நீடித்தல் (எடுத்துக்காட்டாக, பத்திரம் 2025 டிசம்பர் முடிவடைய இருந்தால், அதன் காலாவதியை 2030 டிசம்பர் வரை நீடிக்கலாம்).

மென்திருப்பங்கள், முறைப்பாடுகள், பணமுடக்கம்

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு (வட்டி அல்லது முதல்தொகை) கொடுப்பனவுகளை நிறுத்துதல், திருப்பிச் செலுத்தல் நிவாரணத்தை வழங்கும். செலுத்தாத தொகைகளின் தீர்வு முறை, இரத்துச்செய்யப்படுதல் முதல் மறுசீரமைப்பதற்கானவை வரை மாறுபடக்கூடும்.

எல்லா வகையான கடன்களும் மறுசீரமைக்கப்படுகின்றனவா?

இல்லை, எல்லா வகையான கடன்களும் மறுசீரமைக்கப்படுவதில்லை. கீழ்க்கண்ட வகையான கடன்கள் மட்டுமே மறுசீரமைக்கப் படுகின்றன.

உள்நாட்டுக் கடன்

சில உள்நாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு (எ.கா. ஓய்வூதிய நிதி, மத்திய வங்கி) இலங்கை அரசாங்கம் செலுத்தவேண்டிய கடன், ஏனைய உள்நாட்டு நிறுவனங்களைத் தவிர்த்து (எ.கா. வணிக வங்கிகள்).

வெளிநாட்டுக் கடன்

இருதரப்புக் கடன்

இலங்கை அரசாங்கம் (மத்திய அரசு மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள்) ஏனைய நாடுகளின் அரசாங்கங்களுக்குச் செலுத்த வேண்டிய வெளிநாட்டு நாணயக் கடன்.

வணிகக் கடன்

தனியார் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கடன் வழங்குபவர்களுக்கு இலங்கை அரசாங்கம் (மத்திய அரசு மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள்) செலுத்த வேண்டிய வெளிநாட்டு நாணயக் கடன், கீழ்க்கண்ட வகையான கடன்கள் மறுசீரமைப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.

பலதரப்பு கடன்

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற பலதரப்பு கடன் வழங்குபவர்களுக்கு இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன்.

குறிப்பு: பொதுவாக உள்நாட்டு / வெளி நாட்டுக் கடனை மூன்று விதமாக வரையறுக்கலாம்:

i) ஆளும் சட்டம், ii) குடியிருப்பிடம் மற்றும் iii) நாணயம்.

வெளிநாட்டுச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட கடன்களை இலங்கை முதலில் தவறிவிட்டது என்பதை நினைவிற்கொள்வது முக்கியம். பின்னர், இலங்கை அபிவிருத்திப் பத்திரங்களை (SLDBs) உள்ளடக்குவதற்கு இலங்கை தனது வெளிநாட்டு நாணயக் கடன்களை விரிவுபடுத்தியது. அவை USDஇல் குறிப்பிடப்பட்டு உள்நாட்டுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன் கருவிகளாகும். அதன் பின்னர் இலங்கை உள்நாட்டு நாணயப் பொறுப்புகளையும் மறுசீரமைப்புக்குக் கொண்டுவந்தது.

எதற்கு பலதரப்புக் கடன் மறுசீரமைக்கப்படவில்லை?

IMF மற்றும் உலக வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்கள் ‘சிறப்புக் கடன் வழங்குநர் நிலை’ என்ற நன்மையைப் பெறுகின்றன. இதனால் அவை பொதுவாக அரசியல் மறுசீரமைப்புகளிலிருந்து விலக்கப்படுகின்றன. இது ஒரு சட்டக் கருத்தாக இல்லை. ஆனால், பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் நடைமுறையாகும்.

இந்த நிலைக்குப் பல காரணங்கள் உள்ளன:

(i) பலதரப்பு நிறுவனங்கள் மிகக் குறைந்த (சலுகை) விகிதத்தில் கடன் வழங்குகின்றன. ஒரு நாடு வணிக நிதியுதவிக்கான அணுகலை இழந்தாலும், கடைசி முயற்சியாக கடன் வழங்குபவன் பாத்திரத்தை வகிக்கிறது.

(ii) பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் குறைந்த நிதிச் செலவுகளை இந்த நிலை ஆதரிக்கிறது. இதனால் அவை பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்குக் குறைந்த கட்டணத்தில் கடன் வழங்குகின்றன.

சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் (ISB) மற்றும் இலங்கை அபிவிருத்திப் பத்திரங்கள் (SLDB) என்றால் என்ன?

சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் (ஐ.எஸ்.பி.) அமெரிக்க டொலரில் கடன் வாங்கவும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு வழங்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

வெளியீடுகள் இலங்கைக்கு வெளியே நடைபெறும் (பெரும்பாலும் சிங்கப்பூரில்). பத்திரங்கள் இலங்கைக்கு வெளியே வழங்கப்படுவதால், ISBகள் வெளிநாட்டுச் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.

பொதுவாக இங்கிலாந்து மற்றும் நியூயோர்க் சட்டங்கள். அதனால்தான், ஜூலை 2022இல் செலுத்த வேண்டிய ஐ.எஸ்.பியை இலங்கை செலுத்தத் தவறியதற்காக ஹாமில்டன் சர்வதேச வங்கி நியூயோர்க் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.

SLDBகள் USD இல் கடன் வாங்குவதற்காக வழங்கப்படுகின்றன. ஆனால், வழங்கல்கள் இலங்கையில் நடைபெறுகின்றன. இதனால், பெரும்பாலான SLDBகள் இலங்கை வங்கிகளால் வாங்கப்பட்டன. இது வங்கிகள் கருவூலப் பத்திரங்களை வாங்குவதைப் போன்றது. ஆனால், இவை USDஇல் வழங்கப்படுகின்றன.

எனவே, SLDBகளை வாங்குவதற்கு வங்கிகள் அரசாங்கத்துக்கு USD வழங்க வேண்டும். SLDBகள் இலங்கையில் வழங்கப்படுவதால், SLDBகளுக்கான ஆளும் சட்டம் இலங்கைச் சட்டமாகும். SLDBகளை மறுசீரமைப்பது குறைவான சிக்கலான செயல்முறையாக இருந்தது, ஏனெனில், அவை உள்நாட்டுச் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றன மற்றும் பெரும்பாலான SLDB வைத்திருப்பவர்கள் இலங்கை வங்கிகள்.

இலங்கை ஏன் தனது கடனை மறுசீரமைக்க வேண்டியிருந்தது?

2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் அரசாங்கத்தின் வருமானம் குறைந்துள்ள நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்தும் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் சிரமங்களை எதிர்நோக்குமென்பது தெளிவாகியது.

கடுமையான வெளிப்புற ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குறைந்தளவிலான அந்நிய செலாவணி கையிருப்பு (அதாவது, அமெரிக்க டொலர்கள்) போன்ற பிரச்சினைகளையும் இலங்கை எதிர்கொண்டது.

குறைந்தளவிலான வெளிநாட்டுக் கையிருப்பு, எரிபொருள், உணவு மற்றும் மருந்து ஆகியவற்றின் இறக்குமதிச் செலவை ஈடுசெய்யவில்லை. இது நடைமுறையில் வெளிநாட்டு நாணயக் கடன்களை செலுத்துவதைத் தடுத்தது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொதுக் கடனை ‘தாங்க முடியாத கடன்’ என வகைப்படுத்தியதுடன், நிலைத்தன்மையை மீட்டெடுக்க நாடு கடன் இலக்குகளை செயற்படுத்த வேண்டும் என்று கூறியது.

உத்தியோகபூர்வ கடன் குழு (OCC) என்றால் என்ன?

கடனைத் தீர்ப்பதற்கான இலங்கை அதிகாரிகளின் கோரிக்கையை விவாதிக்க 2023 மே மாதம் உருவாக்கப்பட்ட இருதரப்புக் கடன் வழங்குநர்களின் குழு இதுவாகும். OCCஇன் தலைமைத்துவமாக இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் உள்ளன.

குழுவில் பாரிஸ் கிளப் கடனாளிகள் மற்றும் பிற அதிகாரபூர்வ இருதரப்பு கடனாளிகள் உள்ளனர். சீனா OCC இல் உறுப்பினராக இல்லை, ஆனால், சீனா, சவூதி அரேபியா மற்றும் ஈரானுடன் இணைந்து OCC கூட்டங்களில் பார்வையாளர்களாகக் கலந்துகொள்கிறது.

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளதா?

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது. ஜூன் 26, 2024 அன்று OCC மற்றும் சீனா எக்சிம் வங்கி உட்பட முக்கிய இருதரப்புக் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை இலங்கை இறுதிசெய்தது. 10 பில்லியன் டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தங்கள் முதிர்வு காலத்தை நீடித்தல், கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைக் காலங்களை மாற்றுதல் மற்றும் வட்டி வீதங்களைக் குறைத்தல் போன்ற முறைகளை உள்ளடக்கியது.

ஜூலை 03, 2024 அன்று, சுமார் 12.5 பில்லியன் டொலர் சர்வதேச பத்திரங்களை மறுசீரமைப்பதற்கான மற்றொரு ஒப்பந்தத்தை இலங்கை இறுதிசெய்தது. இந்த ஒப்பந்தம், இலங்கையின் பத்திரங்களில் 50% உள்ளடக்கியது. சிகிச்சையின் ஒப்பீடு காரணமாக இது OCCஇன் ஒப்புதலுக்கு உட்பட்டது. அதன் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வோடு சீரமைக்க IMF ஒப்புதலுக்கு உட்பட்டது.

பொருளாதாரம் மீளும் வரை அரசாங்க செலவீனங்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் அண்மைய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில் இலங்கையின் நிதி நிலையை ஸ்திரப்படுத்துவதே இந்த மறுசீரமைப்பின் நோக்கமாகும்.

சுட்டிக்காட்டப்பட்ட கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளின்படி, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் சேவைச் செலவு (வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு வெளிநாட்டு நாணயத்தில் செலவழிக்கப்பட்ட பணத்தின் அளவு) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2%இலிருந்து 4.5% ஆகக் குறையும். இது இலங்கையின் வெளிநாட்டு நாணயத்தின் வெளியேற்றத்தை கணிசமாகக் குறைப்பதோடு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் வளரவும் அனுமதிக்கும்.

கடன் மறுசீரமைப்பு இலங்கையின் வெளிநாட்டுக் கடன் சுமையைக் குறைக்குமா?

ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ஆம். வட்டி வீதங்களில் குறைப்பு மற்றும் இருதரப்பு மற்றும் வணிக வெளிநாட்டுக் கடனுக்கான முதிர்வு நீடிப்புகளைப் பெற அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. கடனளிப்பவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு சலுகைக் காலத்தை வழங்கியுள்ளனர், எனவே, 2027ஆம் ஆண்டு வரை IMF திட்டத்தில் இருக்கும் வரை, இலங்கையானது குறைவான வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் சுமையைக் கொண்டிருக்கும். இது இலங்கைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மீட்சியாகும். மேலும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் நாட்டை சிறந்த பொருளாதார நிலைக்கு இணைத்துக்கொள்வதற்கான நேரத்தை இது அனுமதிக்கிறது. அதற்கு மேலதிகமாக, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கணிசமான பகுதியான வட்டிச் சுமை குறைந்துள்ளது.

கடன் மறுசீரமைப்பில் IMFஇன் ஈடுபாடு என்ன?

IMFஇன் மாதிரியானது மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையை வழங்குகிறது. அதன் கடன் இலக்குகள் மற்றும் நிதியுதவி அனுமானங்கள் மறுசீரமைப்புக் கடனின் விதிமுறைகளை மாற்றியமைப்பதன் மூலம் அரசாங்கம் அடைய வேண்டிய ‘மறுசீரமைப்பு உறை’யை வரையறுக்கின்றன. முக்கியமாக, IMF ஒட்டுமொத்தக் கடன் நிவாரணம் தேவை என்று கூறுகிறது. ஆனால், குறிப்பிட்ட கடனாளிகளிடமிருந்து அதைப் பெறுவதற்கு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தாது.

IMF கடன் வழங்கும் கொள்கைகள் மறுசீரமைப்பு செயல்முறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. கடன் தாங்க முடியாததாகக் கருதப்படும் சந்தர்ப்பங்களில் ஒரு திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன், IMF குறிப்பிட்ட நாட்டுக்குப் போதுமான கடன் நிவாரணம் வழங்குவதற்கு கடனாளிகளிடமிருந்து உறுதிப்பாட்டைக் கோரும். இந்தத் தேவை, இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஏற்பட்ட தாமதங்களின் ஒரு பகுதியை விளக்குகிறது, ஏனெனில், சீனா சர்வதேச நாணய நிதியத்துக்கு பாடப்புத்தக வார்த்தைகளுடன் ஒரு கடிதத்தை வழங்க வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு IMF நேரடியாக மத்தியஸ்தம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடனை மறுசீரமைக்க வேண்டிய விதம் குறித்து இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எவ்வாறாயினும், கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வின் அடிப்படையில் IMF நிர்ணயித்த அளவுருக்களை இலங்கை கடைப்பிடிக்க வேண்டும். OCC, China EXIM வங்கி மற்றும் பத்திரதாரர்கள் மற்றும் CDB போன்ற கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

IMF திட்டம் மீள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதா?

ஒட்டுமொத்த இலக்குகள் நிர்ணயிக்கப் பட்டவுடன் விவாதங்களுக்கு அதிக இடமில்லை. இருப்பினும், இலக்கை அடைவதற்கான முறைகள் குறித்து பேச்சுவார்த்தை மற்றும் பேரம் பேசுவது சாத்தியமாகும். எடுத்துக்காட்டாக, 2025ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% வரி வருவாயை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், வரி வருவாய் எவ்வாறு உயர்த்தப்படுகிறது என்பதற்கான சரியான விவரங்கள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, இது விளிம்பு வரி வீதங்களின் அதிகரிப்பு அல்லது வரி வரம்புகளில் மாற்றம், VAT அதிகரிப்பு மற்றும் வருமான வரி அதிகரிப்பு போன்றவற்றுடன் உயர்த்தப்படலாம்.

குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் IMF திட்ட இலக்குகளில் சிலவற்றுக்கு விலக்களிக்கலாம் அல்லது அவற்றை மாற்றலாம். ஆனால், இது பொதுவாக காலநிலை அதிர்ச்சி போன்ற அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளுக்கு மட்டுப்படுத்தப்படும்.

இலங்கையின் கடனை ‘மோசமான கடன்’ (odious debt) என்று தள்ளுபடி செய்ய முடியுமா?

மோசமான கடனின் சட்டக் கோட்பாடு, மக்களின் அனுமதியின்றி அவர்களுக்குப் பயனளிக்காத இறையாண்மைக் கடன் மோசமானது என்று வாதிடுகிறது. குறிப்பாக, கடன் வழங்குபவர்கள் இந்த உண்மைகளை முன்கூட்டியே அறிந்திருந்தால், இந்தக் கடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு மாற்றப்படக் கூடாது. மோசமான கடன் என்பது நன்கு அங்கீகரிக்கப்பட்ட சட்டக் கோட்பாடு அல்ல, இது இதுவரை நிஜ உலகப் பயன்பாடு இல்லாத கல்வித்துறை மற்றும் கொள்கை வட்டாரங்களில் விவாதிக்கப்பட்ட ஒரு கருத்தாகும்.

இலங்கையின் கடனை ஒரு மோசமான கடனாக மன்னிப்பது பற்றிய வாதம், எதேச்சதிகார ஆட்சியின் கீழ் கடன் பெறப்பட்டது. எனவே, அது சட்டவிரோதமானது என்று கருதப்படலாம் என்ற கருத்தைச் சுற்றியே உள்ளது. எதேச்சதிகார ஆட்சி மற்றும் மோசமான கடனைப் பற்றி விவாதிக்கத் தொடங்க வேண்டிய தேவை இலங்கையுடன் ஒப்பிடும்போது மிகவும் கடுமையானது. அது குறைபாடுகள் இருந்தபோதிலும், இன்னும் ஜனநாயகமாக இயங்குகிறது.

மோசமான கடனைப் பற்றிப் பேசுவது கொள்கை வகுப்பாளர்களுக்கு ஆபத்தான முடிவாகும். ஏனெனில், இது பல ஆண்டுகளாக முதலீட்டாளர்களிடையே அரசியல் அபாயங்கள் பற்றிய உணர்வை உயர்த்தக்கூடும். இது எதிர்காலத்தில் இலங்கையின் கடன் வாங்கும் திறனைப் பாதிக்கும்.

அரசு சார்ந்த கடன் கருவிகள் (state contingent debt instruments) என்றால் என்ன?

SCDIகள் நிதிக் கருவிகளாகும். அதன் வருமானம் வெளிப்புற மாறிகள், பெரும்பாலும் பொருளாதார குறிகாட்டிகள் மீது தொடர்ந்து இருக்கும். உதாரணமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறிப்பிட்ட வரம்பை மீறும் ஆண்டுகளில் 3% முதல் 5% வரை அதிகரிக்கும் கூப்பன் வீதத்தை ஒரு பத்திரத்தில் காணலாம்.

இலங்கை அரசு தற்செயல் கடன் ஆவணங்களை வழங்க முடியுமா?

கடனாளர்களுடனான பேச்சுவார்த்தை களிலுள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய உதவுவதற்காக அத்தகைய கருவிகளை வழங்குவதை இலங்கை பரிசீலிக்கலாம். இருப்பினும், பின்வரும் முக்கியமான காரணிகளை கவனமாகக் கருத்திற்கொள்ள வேண்டும்:

சட்ட அபாயம்: 

சில நாடுகள் சர்வதேச நீதிமன்றங்களில் இத்தகைய கருவிகளுடன் தொடர்புடைய தரவு கையாளுதல் குற்றச்சாட்டுகளின் காரணமாக வழக்குகளை எதிர்கொண்டுள்ளன.

சிக்கலானது: 

இந்தக் கருவிகள் மதிப்பீடு செய்வது சவாலானது. மேலும், அவற்றின் ஆரம்ப வடிவமைப்பிலுள்ள குறைபாடுகள் எதிர்காலத்தில் எதிர்பாராத வகையில் பெரிய கட்டணங்களுக்கு வழிவகுக்கும்.

சந்தை அணுகல் மீதான தாக்கம்: 

முதலீட்டாளர்கள் மதிப்பிடுவதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் மாநிலதற்செயல் கருவிகள் சிக்கலானதாக இருக்கலாம். இது இரண்டாம் நிலை சந்தையில் பலவீனமான செயற்றிறனுக்கு வழிவகுக்கும். இயல்புநிலையைத் தொடர்ந்து மூலதனச் சந்தைகளுக்குத் திரும்புவதற்கான அளவுகோலை நிறுவுவதற்கான நாட்டின் திறனை இந்தச் சிக்கலானது தடுக்கலாம்.

திருப்பிச் செலுத்தும் திறன்:

 கடனைத் திருப்பிச் செலுத்த கடுமையாக அதிகரிக்கும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்காக நாட்டின் திருப்பிச் செலுத்தும் திறனுடன் பொருந்தக்கூடிய வகையில் அடிப்படைத் தூண்டுதல் வடிவமைக்கப்பட வேண்டும்.

IMF மற்றும் ஒப்பீட்டுக் கட்டுப்பாடுகள்:

SCDIகளுடன் இணைக்கப்பட்ட மாறக்கூடிய ஊதியங்கள் IMF அல்லது உத்தியோகபூர்வ கடனாளிகளால் IMF கடன் இலக்குகளை மீறுவதாகக் காணப்படலாம். உத்தியோகபூர்வ கடனாளிகளின் கடன் தீர்வில் சாதகமான சூழ்நிலைகள் சமமாக ஒருங்கிணைக்கப்படாவிட்டால், ஒப்பிடக்கூடிய தீர்வுக் கொள்கையையும் இது மீறலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *